Wednesday, December 21, 2011

திருமணச் சடங்கு சீர் திருத்தம் -2


சமூக , பொருளாதார, தொழில்நுட்ப அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சிக் கேற்ப ஒரு சமுதாயம் தனது சடங்கு சம்பிரதாயங்களில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளவில்லையானால் அந்த சமுதாயத்தின் அழிவினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காரணமே தெரியாமல் பல்வேறு சடங்கு முறைகளைக் கட்டியழுது கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாயமும் தனது தேவையற்ற பழக்க வழக்க சடங்கு முறைகளை உடைத்தெரிந்து உண்மையான சமுதாய முன்னேற்றத்தின் திசையில் திரும்ப வேண்டிய காலகட்டம் இது.
எனவே திருமணச்சடங்குகளில் உளவியல் மற்றும் அறிவியல் ரீதியிலான கீழ்கண்ட சில நடைமுறைகளை ஏற்படுத்துதல் நலம்.

திருமணச்சடங்குகள்
(முதலில் தவம் தெரிந்த பெரியோர்கள் சிலர் மணமேடையில் தவம் செய்து மணமக்களையும் வருகை தந்த
மக்களையும் வாழ்த்துதல் நலம் )
1. பெற்றோர் வணக்கம்
2. குரு வணக்கம்
3. பஞ்ச பூத வணக்கம்
4. நவக்கிரக வணக்கம்
5. இறை வணக்கம்
6. தாலி கட்டுதல்
7. உறுதிமொழி எடுத்தல்
8. சமுதாயநல உறுதிமொழி
9. பெற்றோர் அவையோர் வாழ்த்துப் பெறுதல்
10. நன்றி வாழ்த்து தெரிவித்தல்
11. அனைவரின் வாழ்த்து
12. ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்

1.பெற்றோர் வணக்கம்
முதலில் மணமக்கள் தங்கள் பிறப்புக்கு காரணமான பெற்றோர்களின் கால்களில் வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

2. குரு வணக்கம்
மகான் வேதாத்திரி மகரிசி, மகான் அரவிந்தர், இராமகிருட்டிணபரம கம்சர் போன்ற இறைஞானம் பெற்ற மகான்களில் ஒருவரின் படத்தின் முன்னே வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

3. பஞ்சபூத வணக்கம்
மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் விண் ஆகியவற்றைக் கிரகித்தே தாவரங்கள் உணவுப் பொருளை உற்பத்தி செய்கிறது. எனவே பஞ்சபூதங்களாலேயே நமது உடல் உண்டாகியிருக்கிறது. பஞ்பூதங்களுக்கு அடயாளமான குத்து விளக்கை வளம்வந்து வணங்கவேண்டும்.
( குத்து விளக்கில் விளக்கு மண், எண்ணெய் நீர், தீபம் நெருப்பு, சூழ்ந்திருப்பது காற்று மற்றும் தீப வெப்பத்தால் அதைச்சுற்றிலும் காற்றில் விண் திரண்டிருக்கும்.)

4. நவக்கிரக வணக்கம்
நமது உடல் பஞ்சபூதங்களினால் ஆகியிருந்தாலும் கோள்களின் இரசாயனத்தன்மைகளினால் ஏற்படும் காந்த அலைகள் நமது உடல்இயக்கத்திற்கும், மனஇயக்கத்திற்கும் உதவுகிறது. எனவே நவக்கிரகங்களை மனதில் நினைந்து வணங்க வேண்டும். கிரகங்கள்  தொடர்பான விளக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

5. இறைவணக்கம்
பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் மூல ஆற்றலாக விளங்கும் இறையாற்றலை வணங்குதல் வேண்டும்.

6. தாலி கட்டுதல்
மணமுடித்ததற்கு அடையாளமாக தாலிகட்டுதல் வேண்டும்.

7. உறுதிமொழி எடுத்தல்
"நான் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொண்ட இவருடன் வாழ்நாள் முழுவதும் சகலவிதமான இன்பதுன்பங்களிலும் உடனிருந்து பங்கெடுத்துக் கொள்வேன் "
என்று மணமக்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.

8. சமுதாய உறுதிமொழி
(இருவரும் சேர்ந்து) " நாங்கள் எங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும், உலகுக்கும் மிகவும் பயனுள்ளவர்களாக வாழ்வோம். நாங்கள் யாருக்கும் துன்பமிழைக்க மாட்டோம். துன்பப் படுவோற்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! "
என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.


9. பெற்றோர் அவையோர் வாழ்த்து
மணமக்கள் இருவரின் தலைக்கு நேராக பெற்றோர்கள் கைகளை நீட்டி "வாழ்க வளமுடன்" என மூன்று முறை வாழ்த்தவேண்டும். பின் அவையோர்கள் அனைவரும் உள்ளங்கைகளை மணமக்களை நோக்கி நீட்டி "வாழ்க வளமுடன்" என மூன்று முறை வாழ்த்த வேண்டும்.

10.நன்றி வாழ்த்து
மணமக்களும் அவர்களின் பெற்றோர்களும் அவையோரை நோக்கி நின்று
" இத்திருமணத்திற்கு வந்தவர்கள், வாழ்த்துத் தெரிவித்தவர்கள் மற்றும் இத்திருமணத்தோடு தொடர்புடைய அனைத்து அன்பர்களும் அவர்தம் அன்புக் குடும்பத்தார்களும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் "
என வாழ்த்தவேண்டும்.

11. அனைவரின் வாழ்த்து
மணமக்கள், பெற்றோர்கள் மற்றும் அவையோர்கள் அனைவரும் சேர்ந்து எழுந்து நின்று
" அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்
வாழ்க வையகம் - வாழ்க வளமுடன் "
என்று மூன்று முறை மனங்குளிர வாழ்த்தி நிறைவு செய்ய வேண்டும்.

12. ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல்
உறவினர்களுக்கு விருந்து வைப்பதுடன் அருகில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும்.

பழைய அர்த்தம் தெரியாத சடங்குகளை எல்லாம் விட்டு விட்டு இந்த புதிய முறைகளைப் பின்பற்றினால் மணமக்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள்.
இதில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் ஆரோக்கிமான விரிவான விவாதத்திற்கு வரவும்.

சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அனைத்து மக்களின் நலனில் அக்கறையுள்ள அறிவிற்சிறந்த இளைஞர்களும், அனுபவம் மிக்க பெரியோர்களும், சமுதாயச் சங்கங்களும், பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளும் அன்போடும் கருனையோடும் இந்த நவீனக் கருத்துக்களை பரிசீலித்து தங்கள் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தி சமுதாய நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் வித்திடுவார்களாக.

" அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்
வாழ்க வையகம் - வாழ்க வளமுடன் "

அன்போடு வி. என். தங்கமணி